
உளுந்து வடை செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – 1 கப்(200g), அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், ஜீரகம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, உப்பு – தேவையான அளவு, ஐஸ் கட்டிகள் தேவையான அளவு.உளுந்து ஊறியதும் தண்ணீர் எதுவும் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை பிரீசரில் ஒரு அரை மணி நேரம் வைத்து எடுத்தாலும் சரி அல்லது ஐஸ் கியூப் போட்டு அரைத்தாலும் சரி, உளுந்த மாவு சூடாகாது. மிக்ஸி ஜாரில் இரண்டு பகுதியாக உளுந்தை பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக உளுந்தை சேர்த்து அதனுடன் தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் ஐஸ் கட்டிகளை போட்டு அரைத்து எடுக்க வேண்டும். இதனால் மிக்ஸி சூடாவது தடுக்கப்படும், மாவின் தரமும் மாறாமல் இருக்கும்.
இது போல எல்லா மாவையும் ஐஸ்கட்டி போட்டு அரைத்து எடுத்த பின்பு, இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு சீரகம் மற்றும் அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை கழுவி, உருவி நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி சேருங்கள். இதனுடன் வாசனைக்கு நீங்கள் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
பின்னர் சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி இதில் சேர்க்க வேண்டும். பெரிய வெங்காயம் சேர்க்கும் பொழுது தண்ணீர் கூடுதலாக விடும் என்பதால், சின்ன வெங்காயம் சேர்த்தால் எல்லோருக்குமே எளிதாக எண்ணெய் குடிக்காத வடை தயாரிக்க வரும். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக மாவை பொசு பொசு என்று திரள கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு பெரிய டம்ளர் ஒன்றை எடுத்து அதன் வாய் பகுதியில் காட்டன் துணியை நனைத்து போட்டுக் கொள்ளுங்கள். அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, அதன் மீது பாலிதீன் கவர் ஒன்றை தேவையான அளவிற்கு வெட்டி வைத்து டைட்டாக ரப்பர் பேண்ட் ஒன்றை சுற்றிலும் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வடைக்கு தயாரித்த மாவை அதன் மீது தடையாக தட்டி நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். பின்பு சூடான எண்ணெயில் அப்படியே போட்டு பொரித்து எடுத்தால், கைகளில் தெறிக்காமல், கிரிஸ்பியான மொறு மொறு வடை ரெசிபி ரொம்ப சுலபமாக தயார் செய்யலாம். ஓட்டை போடும் பொழுது தண்ணீரை தொட்டுக் கொள்ளுங்கள்.


