தஞ்சை பெரிய கோயில் வரலாறு | Thanjavur temple history in Tamil

0

 தமிழகம் என்றாலே ஆன்மீக பூமி என இந்திய முழுக்க உள்ள மக்களால் அறியப்படுகின்றது. அந்த வகையில் தமிழகத்தின் புகழை இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் பரப்பும் வகையில் சுமார் 1000 வருடங்களை கடந்து இன்றும் கம்பீரமாக நிற்கின்ற இந்த தஞ்சை பெரிய கோயில் வரலாறு (Thanjavur temple history in Tamil) குறித்தும் அதன் சிறப்புக்கள் மற்றும் சுவாரசிய தகவல்கள் குறித்தும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.


மூலவர்  -பெருவுடையார் 
அம்பாள் -பெரியநாயகி 
தல தீர்த்தம் -சிவகங்கை தீர்த்தம் 
தல விருட்சம் -வன்னி மரம் 
வேறு பெயர் -பிருஹதீஸ்வரர் கோயில்
 கட்டியவர் -ராஜ ராஜ சோழன் 
பழமை -1112 ஆண்டுகள் 
நேரம் -காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை 
அமைவிடம் -தஞ்சாவூர் நகரம் 
மாவட்டம் -தஞ்சாவூர் 
மாநிலம் -தமிழ்நாடு.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்

தஞ்சாவூர் பெரிய கோயில் 33,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு கோயிலாக இருக்கிறது. இக்கோயிலின் வெளிப்புற மதில் சுவர்கள் 17ஆம் நூற்றாண்டில் தஞ்சை பகுதியை மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கிழக்கு திசை நோக்கியவாறு உள்ள ராஜகோபுரம் அமைந்த கோயிலாக இந்த தஞ்சை பெரிய கோயில் திகழ்கிறது. இந்த திருக்கோவிலுக்கு மூன்று திருவாயில்கள் உண்டு. மூன்று திருவாயல்களுக்கும் முறையே ராஜராஜன் திருவாயில், கேரளாந்தகன் திருவாயில், திருவணுக்கன் திருவாயல் என்கிற பெயர்கள் உண்டு.
முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கோயில் என்பதால் திருக்கோவிலுக்கு “கற்றளி” என்கிற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோயில் கட்டப்பட்டதில் மற்றொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் கோயில் கட்ட தேவைப்பட்ட கருங்கற் பாறைகள் கொண்ட மலைகள் எதுவும் தஞ்சாவூர் அமைந்துள்ள பகுதிக்கு 60 கிலோமீட்டர் சுற்றளவில் எங்கும் கிடையாது என்பதுதான்.


கோயிலின் மூன்றாவது வாயிலை கடந்து உள்ளே சென்றால் சுமார் 13 விமானங்கள் கொண்ட நூற்றி 216 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய கர்ப்பகிரக விமானமும், அதற்கு நேர் எதிராக மிகப்பெரிய நந்தி சிலை கொண்ட மண்டபமும் அமைந்துள்ளன. கோயிலின் சுற்றுப்புறங்களில் யாகசாலை எனப்படும் ஹோமங்கள் நிகழ்த்தும் மண்டபமும், பண்டசாலை எனப்படும் கோயிலுக்கு தேவையான பொருட்களை வைக்கின்ற அறைகள் கொண்ட மண்டபமும், பாகசாலை கோயிலுக்கு தேவையான பிரசாதங்களை சமைக்கின்ற சமையலறை மண்டபமும் அமைந்திருக்கின்றன.

இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு மூலவர் மண்டப விமானத்தின் நிழல் கோயிலின் தரை மீது விழாது என்பது தான். கோயிலின் மூலவர் தெய்வமான சிவபெருமான் பெருவுடையார் எனும் பெயரிலும், அம்பாள் பெரியநாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். கோவிலின் தலவிருட்சமாக வன்னி மரம் திகழ்கின்றது. இத்திருக்கோயிலின் தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.


இக்கோயிலின் கருவறை லிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும் 12 அடி உயரம் கொண்ட லிங்கம் தமிழ் மொழி எண் 12 உயிர் எழுத்துக்களை குறிக்கின்ற வகையிலும், 18 அடி உயரம் கொண்ட லிங்கத்தின் பீடம் 18 மெய் எழுத்துக்களை குறிக்கின்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் சண்டிகேஸ்வரர் தனி சன்னதி இந்த தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமே உள்ளது. கோயிலில் நவகிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானே நவகிரக நாயகர்களின் அம்சம் கொண்டவராக இருப்பதால் கோயிலில் நவகிரகங்களுக்கு பதிலாக நவ லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலில் வாராகி அம்மனுக்கு என தனி சன்னதி உள்ளது. சோழ மன்னர்களில் இணையற்றவரான ராஜ ராஜ சோழன் இந்த வாராஹி அம்மனை வழிபட்டு சென்று அனைத்திலும் வெற்றி பெற்றதால் இன்றளவும் இந்த அம்மனை வழிபட்டு செல்பவர்கள் தாங்கள் ஈடுபடுகின்ற காரியங்களில் அனைத்தும் வெற்றி கிட்டுவதாக கூறுகின்றனர். கோயிலில் நடைபெறுகின்ற எந்த ஒரு சிறப்பு விழாக்களும், இந்த வாராகி அம்மனுக்கு வழிபாடு செய்த பிறகு தான் நடத்தப்படுகின்றது.


தஞ்சை பெரிய கோவில் சிற்பங்கள்


சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற சோழ மன்னர்கள் இந்த தஞ்சை பெரிய கோயிலை சிற்பங்களின் சொர்க்கமாக படைத்துள்ளனர். இங்கே காணப்படுகின்ற ஒவ்வொரு சிற்பமும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. சைவ, வைணவ மத கதைகள் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்தூணிலும் ஒவ்வொரு வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டு, காண்போரை மெய் மறக்க செய்யும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோயிலை சோழர்கள் அமைத்துள்ளனர். இக்கோயில் சைவ மத கோயிலாக இருந்தாலும் வைணவ மத தெய்வங்களான நரசிம்மர், திருமால், லட்சுமி தேவி ஆகிய தெய்வங்களின் சிலைகளும் மிக நேர்த்தியாக இக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் சோழர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் பலவும் சிற்பங்கள் வடிவில் கோயிலில் செதுக்கப்பட்டு அதை காண்பவர்களுக்கு வரலாற்று பாடமாக திகழ்கிறது.



தஞ்சை பெரிய கோயில் கட்டியவர் யார்


தஞ்சை பெரிய கோயிலை சோழ வம்சத்தின் மிகச்சிறந்த அரசர்களின் ஒருவரான ராஜ ராஜ சோழன் என்பவர் கட்டினார். இந்த தஞ்சை பெரிய கோயில் 1003 கட்ட துவங்கி 1010 பத்தாம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் இத்திருக்கோயிலை மிக நேர்த்தியாக கட்டி முடிக்க மொத்தம் 34 ஆண்டுகள் ஆனதாகவும் கூறுகின்றனர். சிவபெருமானின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட ராஜ ராஜ சோழன் தான் சிவபெருமானுக்கு மிக சிறப்பான, பிரம்மாண்டமான யாரும் மீண்டும் கட்ட முடியாதபடி ஒரு கோயிலை அமைக்க விரும்பி, இந்த மிகப்பெரும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகின்றது.

இக்கோயில் கட்ட பயன்படுத்தப்பட்ட கருப்பாறை கற்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் தற்போதைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைகளில் இருந்து ராஜராஜ சோழன் வெட்டி எடுத்து சென்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தஞ்சை பெரிய கோயிலின் கருவறை கோபுரத்தின் மீது இருக்கும் பிரம்மாண்ட கலசம் ஒற்றை கல்லால் செதுக்கப்பட்டதாகவும், இந்த பிரம்மாண்ட கல்லை தந்த பெரிய கோபுரத்தின் மீது கொண்டு செல்ல தஞ்சைக்கு அருகில் உள்ள சாரப்பள்ளம் என்கிற ஊர் வரை மணல் கொட்டி, கோயில் கோபுரத்திற்கு சரிவான பாதை அமைத்து, பின்பு இந்த பிரம்மாண்ட ஒற்றை கல்லை அந்த மணற்பாதையில் உருட்டிச் சென்று இந்த கருவறை விமானத்தின் மீது பொருத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.



தஞ்சை பெரிய கோவில் எத்தனை அடி


தஞ்சை பெரிய கோவிலின் கருவறை மண்டபம் என்பது தரையில் இருந்து 216 உயரம் கொண்டது. தமிழ் மொழியின் 216 உயிர் மெய் எழுத்துக்களை குறிக்கின்ற வகையில் சோழர்களால் இந்த உயரத்தில் கருவறை கோபுரம் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கருவறை கோபுரத்தின் மீதுள்ள ஒற்றை கல்லாலான கலச பாறை மட்டும் 80 டன் எடை என கூறப்படுகின்றது.

தஞ்சை பெரிய கோவில் சிறப்பு அம்சங்கள்

தஞ்சை கோயில் ராஜ ராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது என முதன் முதலில் 1886 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டு வரலாற்று ஆய்வாளரான யூஜீயின் ஹுல்ட்ஸ் என்பவர் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். தஞ்சை கோயிலை கட்டிய சோழப் பேரரசரான ராஜராஜன் இக்கோயிலில் எங்குமே தன்னுடைய பெயரை பொறித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கோயிலை கட்டிய தலைமைச் சிற்பியான “குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தட்சன்” பெயர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

கோயிலை கட்டி முடித்த ராஜ ராஜ சோழன் கோயில் பயன்பாட்டிற்கென பல கிராமங்களை தானமாக அளித்துள்ளார். மேலும் இந்த கோயிலில் நடைபெற்ற அகழ்வாய்வின் பணியின் பொழுது கிடைத்த செப்பு தகடுகளை ஆய்ந்த போது இக்கோயிலை நிர்வகித்த நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர்கள், சேவகர்கள், கோசாலை காப்பாளர்கள், துணி துவைப்பவர்கள், காவலாளிகள், நாட்டியக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் பெயர்களும் அவர்களை கௌரவிக்கும் விதமாக ராஜராஜ சோழன் இடம் பெயர் செய்தார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோயிலில் மூலவர் சிலையான சிவபெருமானின் லிங்கத்திற்கு அடியில் மிகப்பெரிய அளவில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இக்கோயிலில் மூலவர் மண்டபத்தில் வெயில் காலத்தில் குளிர்ச்சியான தன்மையும், குளிர் காலத்தில் வெப்பமான தன்மையையும் பக்தர்கள் உணர்வதாகவும் கூறப்படுகின்றது. கோயில் சார்பாக தினந்தோறும் பயணிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உணவு வழங்கப்பட்டதாகவும். மேலும் திருவிழாக்களின் பொழுது இக்கோயில் சார்பாக பலதரப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டதாகவும் கோயில் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ராஜராஜ சோழனும் மற்றும் சோழ அரச குடும்பத்தினர் அனைவரும் பலவிதமான பொருட்களை இக்கோவிலுக்கு தனமாக வழங்கியுள்ளனர். தற்கால அளவின்படி 183 கிலோ அளவிற்கான தங்க பாத்திரங்களையும், 22 கிலோ அளவிற்கான தங்கம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட நகைகள், 222 வெள்ளி பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கோயிலின் தின பூஜை மற்றும் வருமானத்திற்காக 40 கிராமங்கள், பூஜை பயன்பாட்டிற்கு தேவைப்படும் பால் போன்றவற்றிற்காக சுமார் 10,000 பசுக்கள் போன்றவற்றை திருக்கோயிலுக்கு தானம் கொடுத்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சோழர்கள் கட்டிய இந்த தஞ்சாவூர் பெரிய கோயிலை அவர்களின் காலத்தில் பின்பு தஞ்சையை ஆண்ட பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மராட்டிய மன்னர்கள் போன்ற பலதரப்பட்ட மன்னர்களாலும் செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டது. மேலும் பெரிய கோயிலின் முன் தாழ்வாரப் பகுதி, நந்தி மண்டபம், அம்பாள் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி போன்ற சன்னதிகள் மட்டுமே சோழர்களுக்கு பிறகு வந்த மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.


தஞ்சை பெரிய கோவில் நந்தி சிறப்பு

தஞ்சை பெரிய கோவிலின் மூலவ மண்டபத்திற்கு நேரம் புறத்தில் இருக்கின்ற நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையாகும். இந்தியாவில் உள்ள சிவாலயங்களில் இருக்கின்ற மிகப்பெரிய அளவிலான நந்தி சிலைகளில் இரண்டாவது பெரிய நந்தி சிலை இந்த தஞ்சை பெரிய கோவில் நந்தி சிலை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நந்தி சிலையின் உயரம் 14 அடியாகும். இச்சிலையின் நீளம் 7 மீட்டர் மற்றும் அகலம் 3 மீட்டர் ஆகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு பிரம்மாண்டமாக நந்தி சிலை இருக்க வேண்டும் என விரும்பி ராஜராஜ சோழன் இச்சிலையை நிறுவியதாக கூறப்படுகின்றது.


நந்தி சிலை இருக்கின்ற மண்டபம் மட்டும் பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இந்த நந்தி சிலையின் எடை மட்டும் சுமார் 20 டன் இருக்கும் என கூறப்படுகின்றது. மாதந்தோறும் இக்கோயிலில் நடைபெறுகின்ற பிரதோஷ வழிபாட்டின் பொழுது சிவபெருமானுக்கு நிகராக இந்த நந்தி பகவானுக்கும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன.

பெரிய கோவில் சிறப்பு

பலதரப்பட்ட சிறப்புகளைக் கொண்ட தஞ்சை பெரிய கோயிலை நன்கு ஆராய்ந்த ஐ.நா சபையின் “யுனெஸ்கோ” எனப்படும் உலக பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு, 1987 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்வுக்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 23 ஆண்டுகள் கழித்து தமிழக அரசு இந்து அறநிலையத்துறை மற்றும் பக்தர்களால் மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)