குல்பி ஐஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர், பாதாம் பருப்பு – 15, முந்திரிப் பருப்பு – 15, ஏலக்காய் – 7, சர்க்கரை – 1/2 கப், காய்ந்த தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்.
குல்பி ஐஸ் செய்முறை விளக்கம்:( Kulfi Ice Recipe in Tamil ) இதற்கு முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஈரம் இல்லாமல் மிக்ஸி ஜாரை துடைத்த பின் அதில் பாதாம், முந்திரி, ஏலக்காய் மூன்றையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சர்க்கரையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த பவுடரை ஒரு பவுலில் மாற்ற வேண்டும். இப்பொழுது இதில் காய்ந்த தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். காய்ந்த தேங்காய் துருவல் இல்லாத பட்சத்தில் சாதாரண தேங்காய் துருவலை பாதாம் முந்திரி அரைக்கும் போதே அதனுடன் சேர்த்து அரைத்து உபயோகப்படுத்தலாம்.
இப்பொழுது ஆறிய பாலை சிறிது சிறிதாக பௌலில் இருக்கும் பவுடர்வுடன் கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். நன்றாக கலந்த பிறகு, அந்த கலவையை பாலில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த பொடியில் எந்த வித கட்டிகளும் ஏற்படாது.
இப்பொழுது ஒரு கிளாசை எடுத்துக் கொண்டு, அதில் நாம் கலந்து வைத்திருக்கும் பாலை நன்றாக கலக்கி ஊற்ற வேண்டும். கிளாஸ் முழுவதும் ஊற்றிய பிறகு அலுமினிய தாளை வைத்து அந்த கிளாசை முழுவதுமாக மூட வேண்டும். அலுமினிய தாள் இல்லாதவர்கள் சாதாரண பிளாஸ்டிக் கவரையும் உபயோகப்படுத்தலாம். நன்றாக மூடிய பிறகு அதன் நடுவில் லேசாக கீறி அதனுள் குச்சியை குத்தி வைக்க வேண்டும். இந்த கிளாசை 8 முதல் 12 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.
12 மணி நேரம் கழித்து அந்த கிளாசை வெளியில் எடுத்து, சாதாரண தண்ணீரில் 1 – 5 நொடிகள் வைத்து எடுக்க வேண்டும். பிறகு மேலே போட்டு வைத்திருக்கும் அலுமினிய தாளையோ அல்லது பிளாஸ்டிக் கவரையோ எடுத்து விட்டு, நம்முடைய கைகளுக்குள் அந்த கிளாஸை வைத்து ஒன்றிரண்டு முறை சுற்ற வேண்டும்.இப்பொழுது அந்த குல்ஃபி கிளாஸில் இருந்து வெளியே வருவதற்கு சுலபமாக இருக்கும்.




